தாய்லாந்தில் வர்த்தக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடாத்திய இராணுவ சிப்பாய் சுட்டுக்கொலை

54 0

தாய்லாந்தில் வர்த்தக வளாகமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ சிப்பாய், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

தாய்லாந்தின் நகோன் ரட்சாசிமா (Nakhon Ratchasima) எனும் நகரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா, இராணுவ முகாமிலிருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்னர் தனது சிரேஷ்ட அதிகாரியை கொலை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வர்த்தக வளாகமொன்றுக்கு சென்ற சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.