வவுனியாவில்  போக்குவரத்துக் காவல்துறையினர் திடீர் வீதிச் சோதனை

311 0

 

வவுனியாவில் உள்ள சிறிலங்கா போக்குவரத்து பொலிஸாரின் விசேட நடவடிக்கையால், வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய பல சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா மன்னார் வீதி பட்டாணிச்சூர்‌ பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி தொடக்கம் 7 மணிவரை இரு‌ மணித்தியாலங்கள் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வவுனியாவில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள விபத்துக்களை கருத்திற்கொண்டு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விஷேட நடவடிக்கையால் வீதி ஒழுங்குகளை மீறி வாகனம் ஓட்டிய 44 சாரதிகளுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 4 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த சோதனை நடவடிக்கையில், தலைக்கவசம் சீராக அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் ஓட்டியமை, குடிபோதையில் வாகனம் ஓட்டியமை, வாகனம் ஓட்டும்போது தொலைபேசி பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றங்களுக்காக சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.