மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

297 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த ஜனவரி 24 ஆந் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆந் திகதி வரையும் 193 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31 ஆம் திகதி வரை 193 பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர். இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 29 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதே போன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 25 பேர், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 34 பேர், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 13 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 19 பேர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 07 பேர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 16 பேர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 07 பேர் , பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 10 பேர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 08 பேர், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 14பேர், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 08 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் ஒருவரும் இனங் காணப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார். மொத்தமாக கடந்தவாரம் 193 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயற்படுமாறும் வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தேங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.