சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிராக கிண்ணியாவில் மக்கள் போராட்டம்

301 0

கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மகமார் மற்றும் நடு ஊற்று ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றுவரும் சட்டவிரோதமான மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தக்கோரி பிரதேசவாசிகளால் இன்று  கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் கச்சக்கொடித்தீவு – மகமார்  பிரதான வீதியிலும் கிண்ணியா பிரதேச சபை முன்பாகவும் இடம்பெற்றது.

 

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,

நடுஊற்று மற்றும் மகமார்  ஆகிய இரு கிராமங்களிலும் சட்டத்துக்கு விரோதமான முறையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வும் கிரவல் அகழ்வும் இடம்பெற்று வருகின்றது.

இதில்  ஈடுபடுகின்ற நூற்றுக்கும்  மேற்பட்ட கனரக வாகனங்கள்  கச்சக்கொடித்தீவு – மகமார்  வீதியினூடாக தினமும் நேர வரையறை இன்றி செல்கின்றன.

இந்த வீதி கனரக வாகனங்கள் செல்லக் கூடிய அளவுக்குச் சீர் இன்றி பள்ளமும் படுகுழியுமாக இருப்பதாலும், ஒடுங்கிய வீதியாக இருப்பதாலும் பாதசாரிகளும் சிறிய வாகனங்களில் செல்வோரும் மாணவர்களும் மரணப் பீதியிலே  நாளாந்தம்  பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கச்சக்கொடித்தீவு மற்றும் மகமார்  பிரதேச  எல்லைக்குள் அந்நஜாத் மகா வித்தியாலயம் , அலிகார் மகா வித்தியாலயம் மற்றும் சக்கரிய்யா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளும் அமைந்துள்ளன. எனவே நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் இதனூடாக பயணம் செய்கின்றனர். இவர்கள் தினந்தோறும் துன்பப்பட்டுக் கொண்டே பாடசாலைக்குச் சென்று வருகிறார்கள்.

அத்தோடு  மகமார் கர்ப்பிணி கிளினிக் செண்டர் , நடுஊற்று வைத்தியசாலை ஆகியனவும் இந்த வீதியிலே அமைந்துள்ளன.  இதனால் கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளர்கள் பயணப்பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளதுடன். வீதியோரம் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சுவாசம் பரியப் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது.

சைக்கிள் ,மோட்டார் சைக்கிளில்  செல்பவர்கள் கனரக வாகனம்  பிரதான வீதியை அடையும் வரை அவ்வாகனத்திற்குப் பின்னால்  தூசு துகள்களுடன் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள், ஏனைய அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களைத் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த பிரதேச வயல் நிலங்களும் குடியிருப்பு காணிகளும் அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறன.

குறித்த விடயம் தொடர்பாகக் கிண்ணியா  பிரதேச சபை தவிசாளர், கிண்ணியா பிரதேச செயலாளர் போன்றவர்களுக்கு சமூக சேவை அமைப்புகள், மத ஸ்தாபனங்கள்  மூலம் உரிய முறையில் தெரியப்படுத்தியும் குறித்த மணல் மாபியா  நிலை தொடர்கிறது.

எனவே, சட்டவிரோத மணல் அகழ்வை உடனடியாக  கட்டுப்படுத்த வேண்டும். மணல் அகழ்வுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டால், கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு வேறு வழியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை  இப்போது போராட்டம் மூலம்  அவர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தனர்.

போராட்ட இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சர்  எஸ்.ஆர்.எச். கமகே பள்ளிவாசல் தலைவர்களோடு  பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது, குறித்த பிரதேசங்களில் மணல் மற்றும் கிரவல் அகழ்வுக்குப் புதிதாக அமைதிப் பத்திரம் வழங்கப்பட மாட்டாது என்றும் குடிபோதையில் வாகனம் செலுத்துவோர் கைது செய்யப்படுவர் என்றும் தெரிவித்த பொலிஸ் அத்தியேட்சர் எதிர்வரும் திங்கட் கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் கச்சேரியில் அரச அதிகாரிகளுடனான  விசேட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

இதனை அடுத்து கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.