வரும் நிதியாண்டில் தமிழகத்துக்கு நபார்டு வங்கி கடனாக ரூ.2.45 லட்சம் கோடி: தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தகவல்

278 0

தமிழகத்தில் விவசாயம், சிறு குறு நடுத்தர தொழில் உள்ளிட்ட துறைகளுக்கு, வரும் நிதியாண்டில் நபார்டு வங்கியின் கடனாக ரூ.2.45 லட்சம் கோடி வழங்கப்படும் என்று தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் தெரிவித்தார்.

தமிழகத்துக்கான ‘வளம் சார்ந்த மாநில அறிக்கை 2020-21’ என்ற அறிக்கையை தேசிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) தயாரித்துள்ளது. சென்னையில் நேற்று நடந்த மாநில கடன் கருத்தரங்கில் இந்த அறிக்கையை தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் பத்மா ரகுநாதன் பேசியதாவது:

முன்னுரிமை கடன் பிரிவின் கீழ், மாநிலத்தின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக கடன் மதிப்பீட்டு திட்டங்களை நபார்டு கடந்த பல ஆண்டுகளாக தயாரித்து வருகிறது.

அந்த வகையில், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 2020-21 ஆண்டுக்காக மாவட்ட வாரியாக செய்யப்பட்ட மதிப்பீடுகள் ஒருங்கிணைக்கப்பட்டு மாநில கடன் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு 2020-21 ஆண்டுக்கான நபார்டின் கடன் மதிப்பீடு ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 629 கோடி. இது கடந்த 2019-20 ஆண்டின் கடன் மதிப்பீடான ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 906 கோடியைவிட 8.25 சதவீதம் அதிகம்.

இதில், விவசாயத் துறைக்கான ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 6 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கான ரூ.46 ஆயிரத்து 899 கோடியும் அடங்கும். இதுதவிர, மத்திய, மாநில அரசுகளால் தொடங்கப்பட்ட திட்டங்களையும் இந்த அறிக்கை எடுத்துக் காட்டு கிறது.

தமிழகத்தில் 4.52 லட்சம் ஹெக்டேர் நிலத்தை பாசனத்தின் கீழ் கொண்டுவரவும், 30 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள், 1,666 பாலங்கள், 8 லட்சம் டன் கொள்ளளவுக்கான சேமிப்புக் கிடங்குகள் அமைக்கவும் நபார்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் உதவி செய்யப்பட்டுள்ளது. 14,800 குடியிருப்பு பகுதிகளுக்கு பல்வேறு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கவும் வழி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், ‘கிராமப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள் – தமிழ்நாடு’ என்ற கையடக்க புத்தகமும்வெளியிடப்பட்டது. கருத்தரங்கின்போது நிதிசார் கல்வியில் சிறப்பாக பணியாற்றிய கிராமிய, கூட்டுறவு, பொதுத் துறை வங்கிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறப்பாக செயல்படும் நீர்வடி பகுதி மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஸ்டேட் வங்கி தலைமை பொது மேலாளர் வினய் டோன்ஸ், ரிசர்வ் வங்கி பொது மேலாளர் மோகனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.