பாகிஸ்தான், வங்கதேச முஸ்லிம்களின் குடியுரிமைக்காக போராடுகிறார் ஸ்டாலின்: பாஜக தேசிய பொதுச் செயலர் குற்றச்சாட்டு

265 0

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மரில் உள்ள முஸ்லிம்களின் குடியுரிமைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் போராடுவதை ஏற்க முடியாது என்றார் பாஜக தேசியப் பொதுச் செயலர் முரளிதர ராவ்.

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.

அனைத்து இந்திய மொழிகளும், கடவுளிடம் செல்லும் வழியைக் காண்பிக்கின்றன. தமிழ், சம்ஸ்கிருதம் என பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. பாஜக அனைத்து மொழிகளையுமே சமமாகப் பார்க்கிறது.

 

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் குடியுரிமைக்காகப் போராடுவதை ஏற்க முடியாது. நடிகர் ரஜினிகாந்த், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளதை வரவேற்கிறோம்.

இந்தியாவில் பலமுறை பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு உள்ளது. தற்போதைய மந்தநிலையை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார். கூட்டணி குறித்து கருத்துகூற, தமிழக அமைச்சர் ஜெயக்குமார் ஒன்றும் பாஜக தலைவர் அல்ல.

கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கருத்துகள் இருக்கும். அதிமுக-பாஜகவிடையே சமூகமான உறவு நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.