பட்டாணி இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம்

299 0

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பட்டாணியின் தேவை அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள பருப்பு மற்றும் மாவு ஆலைகள் பல்வேறு பட்டாணி வகைகளை கொள்முதல் செய்கின்றன.

அந்த ஆலைகள் சார்பில் எனக்கு அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் அடிப்படையில், சிறு, குறு, நடுத்தர தொழில் பிரிவில் உள்ள அவர்களின் பிரச்சினைகளை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

 

பாரம்பரிய மற்றும் ஒவ்வொரு மண்டலம் சார்ந்த பிரத்யேக நொறுக்குத் தீனி வகைகளை தயாரிக்க பட்டாணி முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. பட்டாணி வகைகள் நம் நாட்டில் 5 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு, 54 லட்சத்து 22 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிரான பகுதிகளில் பயிரிடப்படும் பட்டாணி, தமிழகத்தில் குறைந்த அளவாக 120 ஹெக்டேரில் பயிரிடப்பட்டு, 1,960 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. அசாம், பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பயிரிடப்படும் மஞ்சள் பட்டாணி வகை அந்த மாநிலங்களிலேயே நுகர்வு செய்யப்படுகிறது.

இந்நிலையில், பாரம்பரிய நொறுக்குத் தீனி வகைகளைத் தயாரிக்க பயன்படும் பட்டாணிக்கு தற்போது தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் தேவை கடுமையாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு,நடுத்தர பருப்பு மற்றும் மாவு ஆலைகள், பட்டாணியை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதன் மூலம் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 65 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் பயன்பெறுகின்றனர். தமிழகத்துக்கு சராசரியாக, 2 லட்சம் மெட்ரிக் டன் பட்டாணி தேவைப்படுகிறது. இதில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

தற்போது பட்டாணி தேவை அதிகரித்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து அனுப்பப்படும் பட்டாணியின் விலைகிலோ ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா உள்ளிட்டநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகம் மூலமாக தமிழகத்தில் உள்ள ஆலைகளுக்கு அனுப்பப்படும் பட்டாணியின் விலை மிகவும் குறைவாக உள்ளது.

அதே நேரம், அயல்நாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநர் ஜெனரல்கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதிவெளியிட்ட பொது அறிவிக்கையில், நாடு முழுவதுக்கும் ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே வெளிநாடுகளில் இருந்துபட்டாணியை இறக்குமதி செய்யமுடியும் என்று புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இந்த கட்டுப்பாட்டின் காரணமாக, ஒரு கிலோ பட்டாணியின் விலை ரூ.65 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது.

இந்த இறக்குமதி தடையானது தமிழகத்தில் உள்ள பருப்பு மற்றும்மாவு ஆலைகள் மட்டுமின்றி பணியாளர்கள் மற்றும் இந்த வர்த்தகத்தில் தொடர்புடைய அனைவரையும் பாதித்துள்ளது.

இந்தத் தடை, பட்டாணியின் தேவையை அதிகரித்து, பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதுடன், தமிழகத்தில் உள்ள பச்சைப் பட்டாணியின் விலையையும் உயரச் செய்துள்ளது.

எனவே, மத்திய அரசு மஞ்சள், பச்சை மற்றும் இதர பட்டாணி ரகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக தமிழகத்தில் உள்ள பருப்பு மற்றும் மாவு ஆலைகளின் பயன்பாட்டுக்கும், அருகில் உள்ள மாநிலங்களின் பயன்பாட்டுக்கும் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தங்களது சாதகமான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.