பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைகள், வரவு செலவுத் திட்டத்தினால் ஒதுக்கப்பட்ட நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள், வெளிநாட்டு முதலீடுகளினூடான அபிவிருத்தித் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கான யோசனை எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் ஒன்றை கொண்டு வருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதிப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழு, அதன் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (06) கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட இருக்கும் இந்த சட்டமூலத்தின் ஊடாக எந்தவொரு நிறுவனத்திடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அவற்றை மதிப்பீடு செய்வதற்கும் குறித்த சுயாதீன ஆணைக்குழுவுக்கு அதரிகாரம் வழங்கப்படும்.

