மாமல்லபுரத்தில் ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை

256 0

மாமல்லபுரத்தில் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைப்பதற்கு ‘ஐஎன்எஸ் வாக்லி’ நீர்மூழ்கி கப்பலை மீண்டும் கொண்டுவருவது குறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்து, கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் 11-ம்தேதி சுற்றுலாத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகில் 30 ஏக்கர் இந்த பாரம்பரிய அருங்காட்சியகத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதில் 10 ஏக்கர் பரப்பில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை நிறுத்திவைத்து அதில் அருங்காட்சியகம் அமைப்பது என்றும் நீர்மூழ்கி கப்பல் அருங்காட்சியகத்துடன், கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகம், ஒலி – ஒளி படக்காட்சி அரங்கம், மீன் காட்சியகம், உணவுப் பொருள் விற்பனை நிலையம் ஆகியவை அமைக்க நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின்கோரிக்கையை ஏற்று கடந்த 2010-ம் ஆண்டில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஐ.என்.எஸ்.வாக்லி என்ற கப்பலை இத்திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியது.

ரூ.10 கோடி ஒதுக்கீடு

இதைத் தொடர்ந்து, இக்கப்பல் விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டது. இந்தக் கப்பலை இழுத்துச் சென்று மாமல்லபுரத்தில் நிலை நிறுத்துவதற்கு மட்டும் ரூ.10 கோடி நிதி அப்போது ஒதுக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் உள்ள நீர்மூழ்கி கப்பலை, மாமல்லபுரத்துக்கு கொண்டுசென்று, அதைத் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நிறுவும் பணியை, ‘டிரேடெக்ஸ் ஷிப்பிங் கம்பெனி’ என்ற தனியார் நிறுவனத்திடம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அப்போது ஒப்படைத்தது.

அந்த நிறுவனம், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நீர்மூழ்கி கப்பலை மாமல்லபுரத்துக்கு இழுத்து சென்றது. ஆனால், அப்பணிகள் தோல்வியடைந்ததால், மீண்டும்கப்பல் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் கப்பலை மாமல்லபுரம் கொண்டுசெல்லபலமுறை ஒப்பந்தம் கோரப்பட்ட நிலையில், யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மாமல்லபுரத்தில் இந்தியா – சீனா இடையிலான முறைசாரா கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது, மாமல்லபுரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றிப் பார்த்தனர். மாமல்லபுரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் அதற்கான திட்ட அறிக்கையை தயாரித்து ஒப்புதலுக்கு அனுப்பிஉள்ளது.

தமிழக அரசு முடிவு

இதன் ஒரு பகுதியாக, நிலுவையில் உள்ள கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, நேற்று தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் கே.சண்முகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சுற்றுலாத் துறைச் செயலர் அசோக் டோங்ரே, கடற்படை கமாண்டிங் அதிகாரி, தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ரவீந்திரன், கடலோர பாதுகாப்புப் படை ஐஜி, கடலோர பாதுகாப்பு திட்டக் குழு கமாண்டென்ட் என்.சோமசுந்தரம், பொதுத் துறைச் செயலர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அமுதவல்லி, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, ஐஐடி கடல்சார் பொறியியல் துறைத் தலைவர், திருச்சி பெல் நிறுவன செயல் இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஐஎன்எஸ் வாக்லி நீர்மூழ்கி கப்பலை மீண்டும் மாமல்லபுரத்தில், அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.,