2021-ல் பாமக ஆட்சியை பிடிக்க கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

259 0

2021-ல் பாமக ஆட்சியை பிடிக்க அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாமக வடக்கு மண்டல செயற்குழுக் கூட்டம், தி.நகரில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: பாமக தொடங்கி 32 ஆண்டுகளில் ஒருமுறைகூட ஆட்சிக்கு வரவில்லை. 70 முதல் 80 எம்எல்ஏ-கள் பெற்றால் இந்த முறை நாம் ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

திமுகவினரிடம் திறமையான நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் ரூ.400 கோடி செலவு செய்து பிஹாரில் இருந்து ஒருவரை இறக்கியுள்ளனர். திமுகவின் அரசியல் கார்ப்பரேட் வசம் சென்றுள்ளது. கார்ப்பரேட்டால்தான் நமக்கு பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திறமை உள்ள பாமக நிர்வாகிகள் கடினமாக உழைத்தால், தமிழகத்தில் வேறு கட்சிக்கு வேலை இருக்காத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் 3-வது இடத்தில் உள்ள பாமக முதலாவது இடத்துக்கு வரவேண்டும். 2021-ல் பாமக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பாமக நிர்வாகிகளுக்கான தணிக்கை கூட்டம் நடத்தப்படும் என்றார்.