இந்தியாவுக்குப் பதிலாக நாங்கள் மலேசியாவிடம் பாமாயில் வாங்குவோம்: இம்ரான் கான்

337 0

மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மலேசியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். இந்த நிலையில் மலேசியப் பிரதமர் மகதீர் முகமது, இம்ரான் கானும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியது குறித்து இம்ரான் கான் பேசும்போது, ”காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தற்காக மலேசியாவை இந்தியா மிரட்டியதை நாங்கள் கவனித்தோம். பாமாயில் வாங்குவதை நிறுத்தி இந்தியா மலேசியாவை அச்சுறுத்துகிறது. மலேசியாவிடமிருந்து பாமாயில் வாங்குவதை இந்தியா நிறுத்தியதால் அதனை பாகிஸ்தான் ஈடு செய்யும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல இடங்களில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது விமர்சித்தார்.

 

மலேசியப் பிரதமர் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், இது இந்தியாவின் உள்விவகாரம் என்று பதிலளித்து. இதனால் இந்திய – மலேசிய உறவு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மலேசிய நிறுவனங்களிடமிருந்து கச்சா பாமாயில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் வாங்குவது தொடர்பான ஆர்டர்களை இந்திய நிறுவனங்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டன.

கச்சா பாமாயில் இறக்குமதி குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் நிறுவனங்கள் அதையும் இறக்குமதி செய்ய முன்வரவில்லை. மலேசியாவுக்குப் பதிலாக இந்தோனேசியாவிலிருந்து கூடுதல் விலைக்கு இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.