கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 490 ஆக அதிகரிப்பு; 2 நாட்களுக்கு ஒருமுறை ஒரேயொருவர் வீட்டிலிருந்து வெளியே வர அனுமதி: சீனா கட்டுப்பாடு

346 0

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 490 ஆக அதிகரித்துள்ளது. அதிகம் பாதிக்கபட்ட ஹுபே மாகாணத்தில் மேலும் 65 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

20 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளதையடுத்து உலகச் சுகாதார மையம் உலக சுகாதார நெருக்கடி நிலை பிரகடனம் செய்துள்ளது. சீனாவில் பல நகரங்களில் லாக்-அவுட் நிலைமைதான். மக்கள் வெளியே வர முடியாத நிலை தொடர்கிறது.

சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் கரோனா வைரஸுடன் சீனாவிலிருந்து இறக்குமதியாகாத புதிய தொற்றும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் கிழக்கு ஜீஜியாங் மாகாணத்தில் ஒரு சிலர் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹாங்சூவில் 3 மாவட்டங்களில் வீடு ஒன்றுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை ஒரேயொரு நபர் வெளியே சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதியளிக்கப்படுகிறது.

இந்தக் கட்டுப்பாடுகளினால் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் நிதித்தலைநகரான ஷாங்காயில் 200 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஜீஜியாங் மாகாணத்தில் 829 பேர் கரோனாவினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

2 வாரங்களில் வூஹான் மாகாணத்தில் கட்டப்பட்ட 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு கரோனா வைரஸ் நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் 8 இடங்களை அவசரகால மருத்துவமனையாக மாற்றப்போகின்றனர்.