குரூப்-2ஏ தேர்வு முறைகேடு: மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்த போலீஸ்காரர் கைது

264 0

மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி அடைய செய்து அரசு பணியில் சேர்த்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் கொடுத்து பதவி பெற்ற அரசு அதிகாரிகளாக உள்ள காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைதானார்கள்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுத்து கூடுதல் மதிப்பெண் பெற்று அரசு பணிகளில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சிக்கி வருவதால் இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.

இந்த 2 முறைகேடு வழக்குகளிலும் தொடர்புடைய சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள். அவரைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஜெயக்குமார் கைது செய்யப்பட்டால், பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயக்குமாரின் கைது நடவடிக்கைதான் இந்த வழக்கில், அடுத்த அதிரடி திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இன்னொரு இடைத்தரகராக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதுவரை குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் 16 பேரும், குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் 5 பேரும் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று குரூப்-2ஏ தேர்வில் பணம் கொடுத்து மனைவிக்கு அரசு பதவி வாங்கி கொடுத்த சென்னை போலீஸ்காரர் ஒருவரும், பணம் கொடுத்து பதவியை பெற்ற 3 அரசு அதிகாரிகளும் நேற்று கைதாகி உள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:-

1. வடிவு (வயது 44). காஞ்சீபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த இவர், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். இவரது கணவர் பெயர் செல்வரசு. இவர் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம், ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து, 271.5 மதிப்பெண்கள் பெற்று, 29-வது இடத்தில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்.

2. முத்துக்குமார் (35). இவர் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, மேற்கு விஜயாபதி என்ற ஊரைச்சேர்ந்தவர். இவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை செய்கிறார். இவர் தனது மனைவி மகாலட்சுமியை வேலையில் சேர்த்துவிட, இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். மகாலட்சுமி தற்போது சென்னை எழிலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இவர் முறைகேடாக தேர்வு எழுதி 276 மதிப்பெண்கள் பெற்று, 24-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

3. ஞானசம்பந்தம் (30). பெரிய காஞ்சீபுரம், சர்வதீர்த்த தென்கரையைச் சேர்ந்தவர். இவர் சென்னை பட்டினப்பாக்கம், பதிவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். இவர் ரூ.15 லட்சம் கொடுத்து, தேர்வில் 256.5 மதிப்பெண்கள் பெற்று, 56-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.

4. ஆனந்தன் (32). காஞ்சீ புரம் மாவட்டம், ஓரிக்கை அஞ்சல், வெள்ளிங்கபட்டரை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் சென்னை செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இவர் ரூ.13 லட்சம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். முறைகேடாக தேர்வு எழுதி, 277.5 மதிப்பெண்கள் பெற்று, 19-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குரூப்2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்குகளில் போலீசார் விசாரணை ஆழமாக விசாரிக்கும்போது தோண்ட, தோண்ட அதிர்ச்சி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுத்து தேர்ச்சி பெற்று தற்போது பதவியில் உள்ளவர்களின் கைது வேட்டையும் தொடர்ந்து நடக்கிறது.