‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடு’’ – டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி பிரசாரம்

313 0

டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ‘‘2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள் வழங்கப்படும்’’ என அவர் அறிவித்தார்.

டெல்லியில் சட்டசபைக்கு வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். கர்கர்டூமா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த தேசத்தில் முதல் முறையாக லோக்பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல நாட்டு மக்களுக்கும் லோக்பால் கிடைத்துள்ளது. ஆனால் டெல்லி மக்கள் இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்காக டெல்லியில் எவ்வளவு பெரிய போராட்டம் (ஆம் ஆத்மி) நடத்தினார்கள், எவ்வளவு பெரிய வி‌‌ஷயம். அவர்களுக்கு எல்லாம் என்ன ஆனது?

பிரதம மந்திரியின் வீட்டுவசதி திட்டத்தை அமல்படுத்த டெல்லி அரசு அனுமதிக்க மறுக்கிறது. இன்னும் இந்த அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் அவர்கள் தொடர்ந்து நலத்திட்ட பணிகளை செயல்படுத்த தடையாக இருப்பார்கள். அரசியல் விளையாட்டை தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

டெல்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத குடியிருப்பு பகுதிகளை நாங்கள் அளித்த வாக்குறுதிப்படி ஒழுங்குமுறைப்படுத்துவோம். நாட்டின் நலனே எங்களுக்கு முக்கியம். 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடுகளை வழங்கும். இந்தியாவை வெறுப்பு அரசியலால் வழிநடத்த முடியாது, வளர்ச்சி என்ற கொள்கை மூலமே வழிநடத்த முடியும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் டெல்லி மக்கள் பா.ஜனதாவை 7 தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்து நாட்டில் ஒரு மாறுதலை ஏற்படுத்த உதவினார்கள். இப்போது உங்கள் ஓட்டு தலைநகர் டெல்லியை நவீனமாக்கவும், பாதுகாப்பான நகரமாக்கவும், மக்களின் வாழ்க்கையை சுலபமாக்கவும் உதவும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

கா‌‌ஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி தீர்ப்பு, கர்தார்பூர் சாலை, துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர் நலனுக்காக குடியுரிமை திருத்த சட்டம் போன்ற மத்திய அரசின் சாதனைகளையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.