நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்ற அரசாங்கம் முயற்சி – அனுர

313 0

நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் சட்டங்களை இயற்றும் நோக்கத்துடன் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை கோருவதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற பிரசார நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, தற்போதைய அரசாங்கம் பல பாதகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்றும் வரவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னர் அரச சொத்துக்களையும் விற்பனை செய்வார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், நாட்டில் இந்த மோசமான சூழ்நிலையை மேலும் அதிகரிக்கச் செய்ய வாய்ப்புள்ளது என்றும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவதை எதிர்பார்க்க முடியாது என்றும் அனுரகுமார திசாநாயக்க கூறினார்.

மேலும் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும் சோபா ஒப்பந்தங்களில் அரசாங்கம் கையெழுத்திடும் என்றும் அதன்பின்னர் இந்த அரசாங்கம் தேசிய சொத்துக்களை விற்று அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் கூடுதல் அதிகாரம் என்பது பாரிய அழிவுக்கு வழிவகுக்கும் என்று கூறிய அனுரகுமார திசாநாயக்க, இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியபோது அரசாங்க தரப்பில் வெறும் 70 பேர் மட்டுமே இருந்தனர் என்றும் எனவே சிறுபான்மை அரசாங்கமே பொதுமக்களுக்கு பயன்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஏன் தேவை என்பதை இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.