02022020 அதிர்ஷ்ட தினமா? வேண்டாம் திருமணங்கள் : கரோனா பீதியில் மக்களிடம் சீனா வேண்டுகோள்

310 0

கரோனா வைரஸ் பீதி எதிரொலியாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் திருமணங்களை ரத்து செய்யவும், மரண இறுதிச் சடங்குகளை விரைவு கதியில் முடிக்கவும் அறிவுத்தியுள்ளது.

கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 259 பேர் பலியாகியுள்ளனர், சுமார் 12,000 பேர் வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடிமை அமைச்சக செய்திக் குறிப்பில் சீன அரசு, “பிப்.2ம் தேதி நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்களை ரத்து செய்க, சூழ்நிலைகளை மற்றவருக்கு விவரியுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 2ம் தேதி என்பது இந்த ஆண்டு விநோதமான அதன் எண் சேர்க்கையினால் அதிர்ஷ்ட நாளாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் பிப்.2, 2020 என்பது 02022020, இதனை திருப்பி வாசித்தாலும் நேரே வாசித்தாலும் ஒன்று போல்தான். எனவே இது ஒரு அரிய தினமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த ஆண்டு இந்தத் தேதியில் திருமணம் வேண்டாம் என்று சீனா அறிவுறுத்தியுள்ளது.

மேலும் மரண இறுதிச் சடங்குகளை விரைவாக அதிக கூட்டம் சேராமல் முடிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிலும் குறிப்பாக கரோனா வைரஸினால் இறந்தவர்கள் உடல் உடனேயே புதைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவில் நாடு முழுதும் பள்ளிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.