தடயவியல் கணக்காய்வு 5 குறித்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில்

217 0

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கை இடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய மத்திய வங்கியினால் தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், 5 அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றுடன் தொடர்புபட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் பாராளுமன்றத்துக்கு கிடைத்துள்ளன.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கைகளுடன் பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. சகல தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு வழங்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவின் பணிப்புரைக்கு அமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால், மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சம்பந்தப்பட்ட பின்னிணைப்புக்கள் மற்றும் வெளிப்படுத்தல்கள் இன்றி மத்திய வங்கியின் திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடயவில் கணக்காய்வு அறிக்கைகள் பூரணப்படாது என ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்திருந்ததுடன், இந்த அறிக்கைகள் குறித்த விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.