கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

293 0

கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கு தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அருண துஷார மென்டிஸ் மற்றும் கஸ்துரிகே காமினி ஆகிய கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றில் இன்று (29) முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது பிரதிவாதியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இரகசிய பொலிஸார், நான்காவது பிரதிவாதியான விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரான டீ.எம்.விஜயகாந்தன் என்ற நபரை கைது செய்வதற்காக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.