தோல்விப் பயம் வந்துவிட்டதால் ஐ.தே.க.வினர் பிரதமரை விமர்சிக்கின்றனர் – நாமல்

417 0

தோல்விப் பயம் வந்துவிட்ட காரணத்தினாலேயே, ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ந்தும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்து வருகிறார்கள் என்று ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கடந்த 4 அறை வருடங்களில் என்ன நடந்தது என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்திற்காக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாது போனது.

பௌத்த மதகுருமார்கள் கைது செய்யப்பட்டார்கள். அடிப்படைவாத கட்சிகளின் பேச்சுக்கு சோரம் போய், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக பார்க்கும் நிலைமை ஏற்பட்டது.

மத்திய வங்கிப் பிணை முறி மோசடி இடம்பெற்றது. இப்படியான அனைவரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மேடையில்தான் உள்ளார்கள். இவர்களால்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பே இல்லாது போனது.

ஆனால், தற்போதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத்தான் ஐக்கிய தேசியக் கட்சியினர் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தோல்வியடைவோம் என்ற பயம் வந்துவிட்டது. இதனால்தான் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.