சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்!

756 0

தமிழீழ விடுதலைப் போராட்டம் அதி உன்னத தியாங்களை நிகழ்தியுள்ளது. உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தல், வெமருந்தை தன் உடலோடுசுமந்து  தற்கொடை தாக்குதல் (கரும்புலித்தாக்குதல்) களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் மோதி வீரச்சாவடைதல் , எதிரியின் குகைக்குள் சென்று கைதாகும் வேளை சயினைட் அருந்தி  தங்கள்  உயிரை மாய்த்தல் என பல்வேறு அர்ப்பணிப்புக்களை கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆகுதி ஆனவர்கள் தமிழீழத் தாய் பெற்றெடுத்த பிள்ளைகளே.

தமிழீழ போர் , இறுதி போர் என வடிவமெடுத்து முள்ளிவாய்க்கால் மண்ணில் முற்றுகையானது. அவ்வேளை தமிழக தொப்பிள்கொடி உறவொன்று தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீயினை சுமந்து ஆகுதியாகிப் போனான் முத்துக்குமார் என்ற தமிழக இளைஞன்.

2009 ஆம் ஆண்டு வன்னி பெருநிலப் பரப்பு எங்கும் சிங்கள இனவாத அரசாங்கம் கோர தாண்டவம் ஆடியது. சர்வதேச ஏகாதிபத்திய அரசாங்கங்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுத மற்றும் ஆலோசனை உதவிகளை  வழங்கியது.

ஏன் யுத்தின் இறுதிகாலப்பகுதியில் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா வந்து ஈழத்தமிழர்களைக் கொல்லும் ராஜபக்க்ஷேவுக்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்து விட்டு சென்றார்.

போரை நிறுத்தும் படி தாய் தமிழக உறவுகள் பல்வேறு விதமான அரசியல் போரட்டங்களை செய்தனர் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது நின்று தாம் வாழும் நாடுகளில் பல் வேறுவிதமான போராட்டங்களை நடத்தினர்.

இவ்வேளை 2009 ஜனவரி 29 ஆம் நாள் முத்துக்குமார் எனும் வீரன் தனது உயிரைத் துறக்கத் துணிந்தான். முத்துக்குமார் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்கவில்லை. உணர்வுப்பூர்வமாக சிந்தித்து, தனது மரணம் தோற்றுவிக்கக்கூடிய அரசியல் எழுச்சியை கற்பனை செய்து, அது நிச்சயம் நிறைவேறும் என்ற கனவுடன் தன்னை தீக்கு இரையாக்கினான்.

 

“உண்ணாவிரதம், மனுகொடுப்பது என சம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்” என தனது இறுதி கடிதத்தில் முத்துக்குமார் அறை கூவல் விடுத்தான்.

”என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்.” என வேண்டுகோள் விடுத்தான். வேடதாரி அரசியல் வாதிகளின் வேசத்தை கலைத்தான் தியாகி முத்து குமார்.

இந்து சமுத்திரத்தின் முத்துக்குள் மூச்சிழந்து போகும் தமிழருக்காய் தன் மூச்சை விட்டன் தமிழகத்து உறவு. இவனுக்கு ஈழத் தமிழீனம் என்ன கைமாறு செய்யப் போகிறது?