சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை!

233 0

சீன பயணிகளுக்கு இலங்கைக்கான விசா வழங்குவதில் எந்தவிதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என்று இலங்கை வெளிவிவார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

பொதுவாக சீனாவில் இருந்து வருகை தரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வைரஸால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தருபவர்களிடம் விசேட கவனம் செலுத்தப்படவும் உள்ளது.

பணடாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெறும் பரிசோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து எந்தவொரு பயணிகளிடத்திலும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் காணப்படின் அவர்கள் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (ஐ.டி.எச்) அனுப்பப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸின் மையமாக விளங்கும் வுஹானில் சிக்கித் தவிக்கும் 30 இலங்கை மாணவர்களையும் அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் திரும்ப அழைத்து வருவதற்காக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து சீன அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது என்று தினேஷ் குணவர்தன மேலுத் தெரிவித்தார்.