உய்குர் முஸ்லிம் விவகாரம்; எனக்கு முழுமையாகத் தெரியாது: இம்ரான் பதில்

272 0

சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என்பது குறித்து முழுமையாகத் தெரியாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பிபிசியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் காஷ்மீர் குறித்துப் பேசும்போது , “கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள் திறந்த சிறையில் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

சீனாவில் உய்குர் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உங்களுக்கு கவலை இருக்கிறதா என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு இம்ரான் கான், ”எனக்கு இதனைப் பற்றி முழுமையாகத் தெரியாது. எனக்கு ஒருவேளை தெரிந்தால் இதுகுறித்து சீனாவிடம் பேசுவேன்” என்றார்.

காஷ்மீர் முஸ்லிம்களைப் பற்றிப் பேசும் இம்ரான் கான், ஏன் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுவதில்லை என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள், பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கசிந்த சீன அரசின் ஆவணங்களை வைத்து, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.