ரோஹண விஜயவீரவின் மனைவி தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

220 0

காணாமல் போனதாக கூறப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோகண விஜயவீரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவு ஒன்றை அரசாங்கம் விடுக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதி மன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ரோஹண விஜயவீரவின் மனைவி சித்ராங்கனீ விஜயவீரவினால் இந்த மேல் முறையீட்ட மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்றைய தினம் (16) நீதியரசர் குழாமினால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி அரசர்களான சிசிர டி.ஆக்குருப், எஸ்.துரைராயா, காமினி அமரசேகர ஆகியோர் நீதிபதி குழாமில் இடம் பெற்றிருந்தனர்.

மனுதாரரான சித்ராங்கனீ விஜயவீரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி காணாமல் போயுள்ள தனது கணவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்துமாறு ஆரம்பத்தில் மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்ததாக குறிப்பிட்டார்.

29 வருடங்களுக்கு பின்னர் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாதென நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி நீதி மன்றத்தில் குறிப்பிட்டார்.

மேல் முறையீட்டு நீதி மன்ற உத்தரவை வலுவிழக்க செய்யுமாறும் கோரியும் இந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரி சித்ராங்கனீ விஜயவீர உயர் நீதி மன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக சட்டத்தரணி குறிப்பிட்டார். இவ்வாறான ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு குறிப்பிட்ட கால எல்லை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் 29 வருடங்கள் சென்ற பின்னர் இவ்வாறான மனு ஒன்றை சமர்ப்பிக்க முடியாது என்று தெரிவித்து நிராகரிப்பதற்கு மேல் முறையீட்டு நீதி மன்றம் வழங்கிய உத்தரவு சட்டத்துக்கு முரண்பட்டதாகும் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார். தமது மனுதாரருக்கு இருந்த அச்சம் மற்றும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறான மனு ஒன்றை உரிய காலத்தில் சமர்ப்பிப்பதற்கு முடியாமல் போனதாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

சட்டத்தரணி முன்வைத்த விடயங்களை விரிவாக ஆராய்ந்த பின்னர் 3 நீதியரசர்களை கொண்ட நீதிபதிக் குழாம் இந்த மனுவை விசாரிப்பதற்கு போதுமான சட்ட அடிப்படை இல்லை என்பதினால் அதனை நிராகரிப்பதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜெனரல் சிறில் ரணதுங்க, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரட்ன, ஜெனரல் ஹெமில்டன் வனசிங்க, ஜெனரல் சிசில் வைத்தியரட்ண ஆகியோரும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.