பாகிஸ்தானில் 18 மணி நேரம் பனிக்குள் சிக்கிய சிறுமி உயிருடன் மீட்பு

58 0

பாகிஸ்தானில் பனிச்சரிவுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் பனியில் சிக்கிய சிறுமி 18 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காஷ்மீரிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் பனிப்பொழிவின் தாக்கமும், குளிரும் மிக கடுமையாக உள்ளது.

கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பனிப்பொழிவின் தாக்கம் மிகமிக அதிகமாக உள்ளது. வீடுகள், தெருக்கள் என எங்கு பார்த்தாலும் பனிக்கட்டிகள் உறைந்து கிடக்கின்றன. பனிப்பொழிவு காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

நேற்று வீடுகளையும் மூழ்கடிக்கும் வகையில் பனிப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்பட்டன. மலையடிவாரங்களில் இருந்த வீடுகளை பனிச்சரிவுகள் மூழ்கடித்தன.

இதன் காரணமாக பனிச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 தினங்களில் மட்டும் 100 பேர் வரை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உயிரிழந்து இருப்பதாக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 12 வயது சிறுமி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அந்த சிறுமியின் பெயர் சமீனாபீபி.

நேற்று முன்தினம் அவள் வீட்டுக்குள் இருந்தபோது பனிச்சரிவு ஏற்பட்டு அவள் சிக்கிக் கொண்டாள். வீட்டின் ஒரு அறைக்குள் சிக்கிய அவளால் தப்பி வெளியே வர முடியவில்லை. உதவி கேட்டு அவள் போட்ட கூச்சல் பனிச்சரிவு சூழ்ந்து இருந்த காரணத்தால் வெளியில் கேட்கவில்லை.

இந்த நிலையில் அவளது தாயார் சானாஸ்பீபி மனம் தளராமல் பேரிடர் மீட்பு படையின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பனிச்சரிவுகளை முழுமையாக அகற்றியபோது ஒரு அறைக்குள் சமீனா உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பது தெரிந்தது. கடுமையான பனி காரணமாக அவள் வாயில் இருந்து ரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது.

பனிக்கட்டிகள் விழுந்ததில் அவள் காலில் சற்று முறிவு ஏற்பட்டு இருந்தது. 18 மணி நேரம் உயிருடன் போராடிக் கொண்டிருந்த அவளை மீட்பு படையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவளது உடல்நிலை தேறி வருகிறது.

இதுகுறித்து சிறுமி சமீனாபீபி கூறுகையில், “நான் செத்து போவேன் என்றுதான் நினைத்தேன். கடவுள் கருணையால் காப்பாற்றப்பட்டு இருக்கிறேன்” என்றார். இந்த பனிச்சரிவில் அவளது சகோதர-சகோதரிகள் உயிரிழந்து விட்டனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நாளை முதல் மிக அதிகமான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பீதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

குறிப்பாக நீலம் பள்ளத்தாக்கு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அங்கு தாங்க முடியாத பனிச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட பனிப்பொழிவு மற்றும் பனிச்சரிவுகளில் சிக்கி நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 74 பேர் பலியாகிவிட்டனர். இதனால் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் சோகமான சூழ்நிலை நிலவுகிறது.