பிரச்சினைக்கு இதுதான் தீர்வு… முன்னாள் மனைவியுடன் வாள் சண்டையிட அனுமதி கேட்கும் கணவன்

245 0

அமெரிக்காவில், தனது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை தீர்க்க, போர்க்களத்தில் அவருடன் வாள் சண்டையிட அனுமதியுங்கள் என நீதிபதியிடம் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் கான்சாஸ் மாநிலத்தில் உள்ள பாவோலா நகரைச் சேர்ந்தவர் டேவிட் ஆஸ்ட்ராம். இவரது  முன்னாள் மனைவி  பிரிட்ஜெட் ஆஸ்ட்ராம் அயோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். சட்டரீதியாக பிரிந்த இவர்களிடையே சொத்திற்கான வரி செலுத்துதல் போன்ற சில பிரச்சினைகள் இருந்து வருகிறது.
இதற்கிடையே, பிரிட்ஜெட் ஆஸ்ட்ராமும், அவரது வழக்கறிஞரும் தன்னை மிகவும் (சட்டரீதியாக) நோகடித்துவிட்டதாக டேவிட் ஆஸ்ட்ராம் கடந்த 3ம் தேதி அயோவா மாநிலத்தின் ஷெல்பி கவுண்டி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில் ‘இருதரப்பினரின் பிரச்சினைகளை போர்க்களத்தில் தீர்த்துக்கொள்வதற்கு அனுமதி அளிக்க நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. மேலும் போர்க்களத்தில் பிரச்சினைகளை தீர்ப்பது அமெரிக்காவில் வெளிப்படையாக தடை செய்யப்படவில்லை. சண்டைக்காக, ஜப்பானில் பயன்படுத்தப்படும் சாமுராய் வாள்களை பெறுவதற்கு 12 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
டேவிட் ஆஸ்ட்ராம்
தனது முன்னாள் மனைவியின் வழக்கறிஞர் உடனான விரக்தியே இந்த முடிவிற்கு காரணம் என அயோவா மாநிலத்தில் இயங்கி வரும் பிரபல பத்திரிக்கையிடம் டேவிட் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷெல்பி மாவட்ட நீதிபதி கூறுகையில், ‘நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான முறையான நடைமுறைகள் பின்பற்றப்படும் வரை, இந்த நேரத்தில் எந்தவொரு தரப்பினரும் தாக்கல் செய்த எந்தவொரு தீர்மானம், ஆட்சேபனை அல்லது மனு தொடர்பாக இந்த நீதிமன்றம் எந்த நடவடிக்கையும் எடுக்காது’ என கூறினார்.