வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 4,500 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

62 0

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற நகரங்களில் இருந்து இன்று முதல் 19-ந்தேதி வரை சென்னைக்கு 4,500 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்த வருடம் கடந்த 10-ந்தேதி முதல் 15-ந்தேதி அதிகாலை வரை 17 ஆயிரம் பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன. இதில் சுமார் 9 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்த வருடம் 2 லட்சம் பயணிகள் அதிகளவு பயணம் செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை நேற்று முடிந்த நிலையில் அரசு விடுமுறை இல்லாத ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகிறார்கள்.

தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலை பார்க்கக்கூடியவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பிற நகரங்களில் இருந்து இன்று (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை சென்னைக்கு 4,500 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

மற்ற நகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு 9,370 சிறப்பு பஸ்களும், சேலம், மதுரை, திருச்சி, தேனி, நெல்லை ஆகிய நகரங்களில் இருந்து திருப்பூர் மற்றும் கோவைக்கு சிறப்பு பஸ்கள் 1,200 முதல் 1,525 வரை இயக்க திட்டமிட்டுள்ளது.

சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் இருந்து பெங்களூருக்கு 376 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது.

வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக அனைத்து முக்கிய நகரங்களிலும் இன்று மாலை முதல் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை வரும் பஸ்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க போலீசாருடன் போக்குவரத்து கழக அதிகாரிகள் இணைந்து சிறப்பு ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

குறிப்பாக பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரை வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்படுகின்றனர். டோல்கேட் மையங்களிலும் வாகனங்கள் எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநகர பஸ்கள்

கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 24 மணி நேரமும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது.