பஞ்சாப் நேஷனல் வங்கிக் கொள்ளை: 1 கிலோ தங்கம், ரூ.1 லட்சம் முருகனிடம் பறிமுதல்

282 0

திருச்சி சமயபுரம் டோல்கேட் பகுதியிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கிளையில் கடந்தாண்டு ஜன 26,27-ம் தேதிகளில் சுவரை துளையிட்டு, லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதையடுத்து கொள்ளிடம் போலீஸார் தஞ்சாவூர் மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்த ரெங்கராஜ் மகன் ராதா கிருஷ்ணன்(28) என்பவரை கைதுசெய்தனர். தொடர்ந்து இவ்வழக்கில் முருகனின் சகோதரி மகன்சுரேஷ், வாடிப்பட்டி தெத்தூர் கணேசனை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முருகனை பெங்களூரு சிறையில் இருந்து அழைத்து வந்து கடந்த 6 நாட்களாக விசாரணை நடத்திவந்தனர். நேற்றுமீண்டும் ரங்கம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் பெங்களூரு சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் கூறியபோது, “பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தநகைகளில் தனது பங்கான 1.028 கிலோவை திருவெறும்பூர் பகுதியில், தான் தங்கியிருந்த வீட்டின் அருகே புதைத்து வைத்திருப்பதாக முருகன் தெரிவித்தார். அங்குஅவரை அழைத்துச் சென்று நகைகளை பறிமுதல் செய்தோம்.

மேலும் ரூ.1.10 லட்சம் ரொக்கத்தையும் முருகனிடமிருந்து கைப்பற்றியுள்ளோம். இந்த வழக்கில்இதுவரை 2.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 700 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட வேண்டும்” என்றனர்.