தமிழகத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் வேண்டும்; மீட்டர்கள் வாங்க ரூ.1200 கோடி தேவை: மத்திய அமைச்சரிடம் தங்கமணி கோரிக்கை

320 0

தமிழகத்துக்கு வரவேண்டிய மின்சாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் மின் இழப்பை தடுப்பதற்காக 4 லட்சம் புதிய மின் மீட்டர்களைப் பொருத்த ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கை, அமைச்சர் பி.தங்கமணி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம்கபூர் ஆகியோர் நேற்று சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

தொடர்ந்து, தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உற்பத்தி செய்து வழங்கும் மின்சாரத்தின் சராசரி தொடரமைப்பு மற்றும் வணிக இழப்புகள் தற்போது 14 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றை மேலும் குறைக்க பகிர்மான மின் மாற்றிகளில் மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. முழுமையாக அனைத்து மின் மாற்றிகளிலும் மீட்டர் பொருத்த தமிழகத்தில் 4 லட்சம் மீட்டர்கள் தேவைப்படுகின்றன. இத்திட்டத்துக்கு ரூ.1,200 கோடி நிதி தேவைப்படுகிறது. எனவே, இந்த நிதியைவழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.

தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் மின்சாரத்துக்கான தொகை 98 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை 3 மாதத்தில் செலுத்த வேண்டும் எனதலைமைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர்கள்

மேலும், மின் பயன்பாட்டினை துல்லியமாக கண்காணிக்க வசதியாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு மத்திய தொகுப்பில் இருந்து 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும். தற்போது குறைவாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, பற்றாக்குறையை சமாளிக்க தனியார் மற்றும் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

வரும் கோடைகாலத்தை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டிய மினசாரத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.