வடக்கு மாநி­லத்­தினை அபி­வி­ருத்தி செய்ய நிதிகளை விடு­விக்க ஆளுநர் துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்:!

391 0

வடக்கு மாகாணத்துக்கென கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிளை விடுவித்து அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களை துரிதமாக்கவும் மீள்குடியேற்றம் மற்றும் காணி விடுவிப்புக்களை துரிதப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநரை அண்மையில் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சிக் காலத்தில் 30 ஆண்டுகள் போரினால் பாதிப்புற்ற வடக்கு மாநிலத்தின் மீள்குடியேற்றம், ஆக்கிரமிப்பிலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம், மீள்குடியேற எதிர்பார்த்து வந்துள்ள மக்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரம், குடியிருப்பு வீடுகள், அதற்கு தேவையான நிதிவசதிகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி, இளைஞர்கள் வேலைவாய்ப்பு ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. முக்கியமாக மீள்குடியேற்றம், வீடுகள், பாதை அபிவிருத்தி வேலைவாய்ப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி விடுவிக்கப்படாமல் முன்னேற்றங்கள் தடைப்பட்டுள்ளன. வடக்கு மாநிலத்துக்கென இத்திட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள், விசேட நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்படாமலிருப்பதால் மீண்டும் மக்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

வடமாநிலத்துக்கு பொறுப்பாக பதவியேற்றுள்ள ஆளுநரான நீங்கள் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவவேண்டும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தேன். ஆளுநரும் எம்முடன் ஒத்துழைத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இணக்கம் தெரிவித்தார் என்றார்.