ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையில் அதிகாரப்போராட்டம் ஆரம்பித்திருப்பதை ஜனாதிபதியின் உரையில் இருந்து உணர்ந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது. அத்துடன் விஜேதாச ராஜபக் ஷ முன்வைத்திருக்கும் தனிநபர் பிரேரணை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேna இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தேர்தல் மேடையில் தெரிவிக்காத விடயமொன்றை அவரது அக்கிராசன உரையில் தெரிவித்திருந்தார். அதாவது அரசியலமைப்பின் 19ஆம் திருத்தத்தை நீக்கிவிடவேண்டும் என்பதாகும். அதேபோல் ஜனாதிபதியின் இந்த கூற்றை, தற்போது விஜேதாச ராஜபக்ஷ் தனிநபர் பிரேரணையாக முன்வைத்திருக்கும் 22ஆம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களில் இருந்து உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
விஜேதாச ராஜபக்ஷ்வினால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இரண்டு பிரேரணைகளையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார் என்பதை அவரது உரையில் இருந்து விளங்கிக்கொள்ளலாம் .ஆனால் இந்த பிரேரணை அரசாங்கத்தின் பிரேரணையாக இருக்குமாக இருந்தால் அரசாங்கம் பிரேரணையாக இதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பதிருக்கலாம். தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்தால் அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள இன்னும் எவ்வளவு காலம் செல்லும் என தெரியாது. அதனால் இந்த பிரேரணை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொண்டு ஆட்சி செய்த அரசாங்கங்கள் அதனைக்கொண்டு நாட்டுக்கு நன்மையான எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஐக்கிய தேசிய கட்சி 1977இல் ஆறில் ஐந்து பெரும்பான்மையை பெற்றுக்கொண்டு 16முறை அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை அராஜக நிலைக்கே கொண்டுசென்றிருந்தது.
2010இல் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் வரப்பிரசாதங்களை வழங்கி பெரும்பான்மையை அமைத்துக்கொண்டார். அதன் மூலம் தொடர்ந்து தான் அதிகாரத்தில் இருப்பதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டிருந்தார். அதனால் கோத்தாபய ராஜபக்ஷ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோருவது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு அல்ல என்பது வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.
ஜனாதிபதியின் உரையில் தனது ராஜபக்ஷ் குடும்பம் தொடர்பாக 8 நிமிடங்கள் கதைத்தார். ராஜபக்ஷ்வினர் தொடர்பாக கதைப்பவர்கள் யாரும் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை தெரிவிக்க மறப்பதில்லை. ஆனால் கோத்தாபய ராஜபக்ஷ் மஹிந்த ராஜபக்ஷ்வின் பெயரை ஒரு இடத்தில் கூட தெரிவிக்காமல் இருந்தது, அவர்களுக்கிடையிலான அதிகாரப்போராட்டத்தின் ஆரம்பமாகும். எதிர்காலத்தில் இன்னும் பலவிடயங்களை கண்டுகொள்ளலாம் என்றார்.

