துமிந்த சில்வா யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை : திலங்க சுமதிபால

336 0

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் துமிந்த சில்வா யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. அவரை தூக்கில் போட வேண்டிய தேவை இருக்காது. அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“நானும், துமிந்த சில்வாவும் சமகாலத்தில் அரசியலில் பிரவேசித்தவர்கள். அவர் ஆரம்ப காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிட்டிருந்தார். தேர்தல்களின்போது எனக்கும் அவருக்கும் கடுமையான போட்டி இருந்தது. இருந்த போதிலும் ஒருவருக்கொருவர் பரஸ்பர உறவை பேணி நண்பர்களாகவே இருந்தோம்.

நானறிந்த வகையில், அவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதில்லை. அடித்தட்டு மக்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவது குறித்து மாபெரும் கனவு அவரிடம் இருந்தது. அதற்காக அவர் அயராது உழைத்து வந்தார்.

எனக்கு தெரிந்த வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரானரும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் துமிந்த யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை.

நான் அவரை ஆறு தடவைகள் சிறைச்சாலைக்குச் சென்று பார்த்தேன். அவரின் தலைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது ஒரு வகையான உலோகப் பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த சத்திர சிகிச்சை சிங்கப்பூரிலேயே மேற்கொள்ளப்பட்டது. மேற்படி சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்திய வசதிகள் இலங்கையில் இல்லை.

சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவரும் துமிந்த சில்வா மாத்திரைகள் உட்கொள்வதால் அடிக்கடி தலைவலிக்கு உள்ளாகிய வருகிறார். அவரை தூக்கில் போட வேண்டிய தேவை இருக்காது. அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படுகிறது. அவருக்கு தேக ஆரோக்கிய விடயங்கள் புரிவதற்கும் சிரமப்பட்டு வருகிறார்”  என்றார்.

அப்படியானால் ஜனாதிபதி அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் அல்லவா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த இராஜங்க அமைச்சர் திலங்க சுமதிபால, ஜனாதிபதி அவருக்கு நேரடியாக பொது மன்னிப்பு வழங்க முடியாது. இதற்கு பிரத்தியே குழுவொன்றை நியமித்து ,அக்குழு அளிக்கும் அறிக்கையை ஆராய்ந்து பார்த்தப் பின்னரே பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றார்.