நல்லாட்சி அரசாங்கத்தின் 13 அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துங்கள்-மஹிந்தானந்த

399 0

நல்லாட்சி அரசாங்கத்தில் 13 அமைச்சர்கள் அரச நிதியில் 150 பில்லியன் ரூபா மோசடி செய்துள்ளனர். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளித்த போதிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. அந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

அரச நிதியில் 150 பில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து கடந்த 2016 ஆம் ஆண்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துமாறுத்தக் கோரி அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது :

நாம் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி அதாவது சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் அரச நிதியில் 150 பில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ள 13 அமைச்சர்கள் தொடர்பில் முறைப்பாடளித்திருந்தோம். சுயாதீனமாக இயங்கும் ஆணைக்குழு என்பதால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். எனினும் அவ்வாறு எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதற்கு முன்னர் இரு தடவைகள் வலியுறுத்தியிருக்கிறார். எனவே மீண்டும் அதனை வலியுறுத்துவதற்காகவே இன்று நாம் வருகை தந்திருக்கின்றோம்.

2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் ஆட்சியமைத்த போது இவ்வாறு முறைப்பாடளிக்கப்பட்டது. அவை தொடர்பில் இரு வாரங்களுக்குள் விசாரணைகள் நடத்தப்பட்டு சிறை தண்னையும் வழங்கப்பட்டது.

ஆனால் எம்மால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவ்வாறு செயற்படாமல் முறைப்பாடளிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நிலைநாட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.