காளைகள் இனவிருத்தி சட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து- டைரக்டர் கவுதமன்

196 0

காளைகள் இனவிருத்தி சட்டத்தால் ஜல்லிக்கட்டுக்கு ஆபத்து என்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், டைரக்டருமான கவுதமன் கூறியுள்ளார்.தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும், டைரக்டருமான கவுதமன், சென்னையில் இன்று ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மெரினா கடற்கரையில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்திய பிறகே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கிடைத்தது. கடுமையான வலியை சுமந்து பெற்ற இந்த ஜல்லிக்கட்டு வெற்றிக்கு வேட்டு வைக்கும் வகையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டு காளை இன விருத்தி சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசின் தூண்டுதலினாலோ அல்லது பீட்டா போன்ற அமைப்புகளின் சூழ்ச்சியினாலோதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று கருதுகிறோம்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவனியாபுரம் சென்று நானும் போராட்டம் நடத்தினேன்.

இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்காளை இனவிருத்தி சட்டத்தின் மூலமாக இனவிருத்திக்கு தகுதியான காளைகளை வைத்திருக்கும் விவசாயிகள் தங்களது காளைகளை பதிவு செய்ய வேண்டும்.

2 ஆண்டுகள் கழித்து இந்த பதிவை புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காளைகளுக்கு மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். விவசாயி காளைகளை வைத்துள்ள இடங்களுக்கு அதிகாரிகள் எந்த நேரமும் நுழையலாம்.

தகுதியில்லாத காளை என கூறி அதனை கொல்வதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது. இதனால் லஞ்சம் பெருக வாய்ப்பு உள்ளது. விவசாயிகளை துன்புறுத்தவும் வாய்ப்பு ஏற்படும்.

மத்திய-மாநில அரசுகள் இனம் பிரிக்கப்பட்ட விந்துக்களை பிரபலப்படுத்த தொடங்கியுள்ளன. இதனால் பெண் கன்றுகள் மட்டுமே பிறக்கும் சூழல் ஏற்படும். செயற்கை ஊசி போடப்படும். பசுக்களுக்கு பெண் கன்று மட்டுமே பிறக்கும். காளைகள் பிறக்காது. எனவே தமிழக அரசு இந்த சட்டத்தை விலக்கி கொள்ள வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு கவுதமன் கூறினார்.