நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் முற்றுகை

195 0

நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி, அவரது வீட்டு முன்பு பாஜகவினர் கோ‌ஷம் எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந் தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினர். நெல்லை கண்ணன் பேசும்போது, மோடி மற்றும் அமித்ஷா பற்றி கடுமையாக பேசினார். மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பற்றியும் அவதூறாக பேசினார்.

இந்நிலையில் நெல்லை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தயாசங்கர் தலைமையில் நெல்லை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு கொடுத்தனர்.

இதையடுத்து அந்த மனு மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த போலீசார், நெல்லை கண்ணன் மீது 504, 505, 505/2, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல், ஒரு தரப்பினரை தூண்டி விடுதல், இரு சமூகங்களுக்கிடையே கலவரம் ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை கண்ணன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்

இந்நிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் முருகதாஸ் தலைமையில் நெல்லை கண்ணன் வீட்டு முன்பு அவரை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பி முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக மனு கொடுத்தனர். பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டதை அறிந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நெல்லை கண்ணன் வீட்டு முன்பு திரண்டனர். அவர்களிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக பாளை பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் அ.தி.மு.க.வினர் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மேலப்பாளையம் பொதுக்கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை போராட தூண்டும் வகையில் பேசியுள்ளார். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை தரக்குறைவாகவும் பேசியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.