பெருந்தோட்ட குடியிருப்புத் தொகுதிக்குள் நுழைந்த சில கிராமிய இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தால் பண்டாரவளைப் பகுதியின் ஊவா ஹய்லன்ஸ் எல்லவெல பிரிவில் மாணவன் அடங்கலாக ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவில் குறித்த தோட்டப்பகுதிக்குள் நுழைந்த இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதுடன் மக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து, தோட்ட மக்கள், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷிடம் தகவல்களை வழங்கியுள்ளனர். அதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மக்களின் நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், பெண்கள் என பலரும் இந்த சம்பவத்தினால் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு காயங்களுக்குள்ளான ஐவர் அட்டாம்பிட்டிய கிராமிய அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இனவாதமிக்க வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்ட பின்னரே, அவர்கள் தோட்ட மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறித்த தோட்ட முகாமையாளர் மற்றும் பகுதி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியையும் குறிப்பிட்ட எல்லவெல தோட்டப் பிரிவிற்கு வரவழைத்து, தோட்ட மக்களின் பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தும்படியும், தாக்கியவர்களை தராதரம் பார்க்காமல் கைது செய்யும்படியும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கமைய செயற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூன்று இளைஞர்களைக் கைது செய்து விசாரணைகளுக்கு உட்படுத்தி வருவதுடன் அதேவேளை அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார்.
இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கருத்துத் தெரிவிக்கையில்,
ஏற்பட்டிருக்கும் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதுபோன்ற மிலேச்சத்தனமான சம்பவங்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் தற்போது இடம்பெற்ற வண்ணமுள்ளன. எமது பொறுமைக்கும் எல்லையுண்டு. இனவாதம் தற்போது தலைவிரித்தாடுகின்றது.
இன்றைய தினம் (நேற்று) பதுளை மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டமும், பதுளை அரச செயலகத்தில் இடம்பெறுகின்றது. முக்கியமாக அக்கூட்டத்தில் நானும் பங்கேற்க வேண்டும். ஆனால், எம்மக்கள் பாதிக்கப்படும் போது எனக்கு அக்கூட்டம் பெரிதல்ல. ஏன் பாராளுமன்ற அமர்வும் எனக்கு பெரிதல்ல. எமது மக்களின் காவல் காரனாகவே நான் இருந்து வருகின்றேன். அதனை எனது கொள்கையாகக் கொண்டுள்ளேன்.
சம்பவம் கேள்விப்பட்டதும், உடன் எல்லவெல தோட்டத்திற்கு விரைந்து, எமது மக்களின் பாதுகாப்பு குறித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
திருவெம்பாவை காலமாக இருந்து வருவதினால், எமது மக்கள் இரவு பஜனைகளில் ஈடுபடுகின்றனர். ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் சுவாமிகளும் இருந்து வருகின்றனர். ஏற்பட்டிருக்கும் சம்பவத்தினால், இவர்கள் பெரும் அச்சம் கொண்டுள்ளனர். இனியும் என்னால் பொறுக்க முடியாது. நல்ல வழியிலோ, கெட்ட வழியிலோ எமது மக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. எனது உயிரையும் துச்சமாக மதித்து, எமது மக்களை பாதுகாப்பேன். இதுபோன்ற அடாவடித்தனங்களை இனியும் அனுமதிக்க முடியாது என்றார்.

