வெள்ளை வேன் விவகாரம் குறித்து எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதை விடுத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுப்பது பயனற்ற செயற்பாடாகும்.
எதிர்காலத்தில் சாதாரண மக்களின் பேச்சுசுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் சூழலே தற்போது காணப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க , ராஜித சேனாரத்ன ஆகியோரது கைது முற்றிலும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இடம் பெற்றவை.
தேர்தல் பிரச்சார மேடைகளில் வெள்ளை வேன் விவகாரம் பிரதான பேசுபொருளாகவே 2010ம் ஆண்டில் இருந்து காணப்பட்டன. அக்காலக்கட்டத்தில் வெள்ளைவேன் ஊடாக பலர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்கள். 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து வெள்ளை வேன் விவகாரம் குறித்து முறையான சட்டவிசாரணைகள் இடம் பெற்றன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்று இன்னும் இரண்டு மாதங்கள் கூட முழுமையடையவில்லை. ஆனால் தேசிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவ் கொடுக்காமல் தீவிர அரசியல் பழிவாங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகின்றன.
கடந்த அரசாங்கத்தில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான சுயாதீன விசாரணைகள் இடம் பெற்று நீதிமன்றத்தின் அனுமதியின் ஊடாகவே கைது இடம் பெற்றன.
ஆனால் நடைமுறையில் அனைத்து விடயங்களும் தலைகீழாக காணப்படுகின்றன.
கைது செய்யப்பட்டதன் பின்னரே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்படுகின்றன. கைது செய்வதற்கு நீதிமன்றின் அனுமதி கோராமல் சட்டமாதிபரின் அனுமதியை மாத்திரம் கோருவது முற்றிலும் மாறுப்பட்ட விடயமாகவே காணப்படுகின்றன.
இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன் விவகாரம் குறித்த குற்றச்சாட்டினை இருவர் முன்வைத்தார்கள். இன்று அவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அந்த ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரையில் வெள்ளைவேன விவகாரம் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை மாறாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக அடக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் குறிப்பிட்ட விடயங்களுக்கும் தற்போது இடம் பெறும் நிகழ்வுகளுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.
கடந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் மாறுப்பட்ட வெறுக்கத்தக்க பிரச்சாரங்களே பொதுஜன பெரமுனவினரால் முன்னெடுத்து செல்லப்பட்டன என அவர் இதன்போது தெரிவித்தார்.

