சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சட்ட மூலங்களை தயாரித்தல் போன்ற விடயங்களுக்கு இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம் என பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் தெரிவித்துள்ளார்.
நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வாவை இன்று நீதி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்ததாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இன்று நீதி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது, புதிய அரசாங்கத்தினால் சட்டத்துறையில் மேற்கொள்ள இருக்கும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சர் உயர் ஸ்தானிகருக்கு விளக்கிக்கூறினார்.
அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வின் அரசாங்கத்தின் கீழ் நாட்டில் இருக்கும் அனைத்து இனங்களுக்கும் சட்டத்தின் மற்றும் நீதியின் நியாயத்தை அனைவருக்கும் ஒரேமாதிரி பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் வேலைத்திட்டமாகும்.
அதேபோன்று அரசாங்கத்துக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் ஒரேமாதிரி சேவை செய்வதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதுடன் சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த உயர் ஸ்தானிகர் குறிப்பிடுகையில், சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் சட்டமூலம் தயாரித்தல் போன்ற துறைகளுக்காக பிரித்தானிய அரசாங்கத்தினால் நிபுணத்துவ அறிவை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். அத்துடன் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தனது பாராட்டையும் அவர் தெரிவித்தார்.

