எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்துக்கு அடுத்ததாக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திரா பெர்ணாந்து தெரிவித்தார்.
பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூடும்போது பதவி நிலை உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்குவது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இததொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
பாராளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி கூட இருக்கின்றது. இதன்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சபையின் முன்வரிசையில் எட்டாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அதற்கு அடுத்தபடியாக இருக்கும் முன்வரிசையில் 7ஆவது ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
சபையில் எதிர்க்கட்சி முன்வரிசையில் 8ஆவது ஆசனம் கடந்த காலம் பூராகவும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவருக்கே ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றது. பாராளுமன்றத்தில் சிரேஷ்ட நிலைமையை கருத்திற்கொண்டு அதற்கு முன்னுரிமை வழங்கியே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
அதேவேளை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் முன்வரிசையின் எட்டாவது ஆசனம் ஜனாதிபதிக்கும் 7ஆவது ஆசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் பாராளுமன்ற சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சி பிரதம கொறடா ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர், ஆளும் கட்சியின் முன்வரிசையின் ஆறாவது ஆசனம் சபை முதல்வருக்கும் 5ஆவது ஆசனம் ஆளும் கட்சி பிரதம கொறடாவுக்கும் ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.

