சுனாமி பேரழிவுக்கு 15 வருடங்கள் நிறைவு; இரு நிமிடங்கள் மௌன அஞ்சலிக்கு அழைப்பு !

431 0

தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 26 ஆம் திகதி காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2004 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவை ஏற்படுத்தியது. இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை தாக்கியது.

இதனால் ஆசிய நாடுகளில் மத்திரம் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகினர்.

இந்நிலையில், சுனாமி அனத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு அமைய 2005 ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு தினம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நாளை மறுதினம் சுனாமி இடம்பெற்று 15 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனையொட்டி சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தானம் கொடுக்கும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை தேசிய பாதுகாப்பு தினமானது முப்படையினர், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் காலி, தெல்வத்த, பெரேலிய சுனாமி நினைவுத்தூபிக்கு அருகில் நாளை மறுதினம் 9.00 மணிக்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.