இரட்டை குடியுரிமை வழங்குவதில் பா.ஜனதாவுக்கு ஆட்சேபனை இல்லை- எச்.ராஜா பேட்டி

167 0

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் பா.ஜனதாவுக்கு ஆட்சேபனை இல்லை என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் வாக்கு கேட்டு பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையை பொருத்த வரை இலங்கையிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பா.ஜனதா செயல்படுகிறது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் உள்பட பலரிடம் பா.ஜனதா பேசியது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து பா.ஜனதாவுக்கு ஆட்சேபனை இல்லை.

தமிழக முதல்வர் பிரதமர் மோடியிடம் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பரிசீலிப்பார்.

கமல்

உலகநாயகன் என்று கமலஹாசன் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது. உலக அறிவு அவருக்கு வேண்டும். கமல ஹாசனுக்கு அரசியல் சட்டமும் தெரியவில்லை. பாராளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை. ஒரு குழந்தைக்கு இருக்கும் அறிவு மட்டுமே கமலஹாசனுக்கு உள்ளது. குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து ஒரு மாதம் தொடர்ந்து வீடு- வீடாக சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்ட மசோதா குறித்து தெரியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்போம். மு.க.ஸ்டாலினுக்கும் தெரிய வில்லை என்றால் அவருக்கும் சொல்லிக் கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.