“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” ஏன் நான் கூட விதிவிலக்கல்ல : மஹிந்த ராஜபக்ஷ

259 0

அரசியல் குற்றச்சாட்டிற்கும், சிவில் குற்றச்சாட்டிற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. இன்று சட்டம் முறையாக செயற்படுகின்றது. சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் பாட்டலி, ராஜித , ரணில் ஏன் நான் கூட விதிவிலக்கல்ல என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

வாத்துவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரம் தற்போதைய அரசியல் களத்தின் பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது. அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் ஆரம்பித்து விட்டதாக எதிர்தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள்.

எந்நிலையிலும் தனிப்பட்ட மற்றும் அரசியல் ரீதியான பகைமையை தீர்த்துக் கொள்ள சட்டத்தினை கருவியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது  செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள் கைது செய்தமைக்கான காரணம் குறித்து கவனம் செலுத்துவது கிடையாது.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்  சட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன என்பதற்கு பல விடயங்கள் சான்றாக குறிப்பிடலாம்.

அரசியல் குற்றச்சாட்டுக்கும், சிவில் குற்றச்சாட்டுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகவே இடம் பெற்றுள்ள கைது விவகாரத்திற்கும் எமக்கும் தொடர்புண்டு என்பதை எதிர் தரப்பினர் குறிப்பிட்டுக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்று சட்டம் அனைவருக்கும் பொதுவாகவே செயற்படுகின்றது.  சட்டத்தின் முன்னிலையில் அனைவரும்  சமம் , பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி, ராஜித, மற்றும் முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க ஏன் நான் கூட விதிவிலக்கல்ல, சட்டத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டுமாயின்  நிலைமையினை அனைவரும் எதிர்க்கொள்ள வேண்டும். இதற்கு அரசியல் விடயங்களை காரணம் காட்ட முடியாது.

இடைக்கால அரசாங்கத்தில் செயற்பாடுகளுக்கு முன் பாரிய விடயங்கள் சவாலாக காணப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தின்  இரு பிரதான அரசியல் தலைவர்களின் செயற்பாடுகள்  பல கேள்வி நிலையினை இன்று தோற்றுவித்துள்ளன. அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்கு போதுமான நிதி திறைச்சேரியில் கூட கிடையாது.  ஐந்து வருட ஆட்சியில் மக்களுக்கு அபிவிருத்தியும் முன்னெடுக்கவில்லை, பொருளாதாரமும் முன்னேற்றப்படவில்லை.

கடந்த அரசாங்கம் மக்களை மகிழ்விக்கும் செய்திகளை அதிகமாகவே  வழங்கியது. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. யதார்த்த நிலைமைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது.  போலியான வாக்குறுதிகளை ஒருபோதும்  அரசியல் தேவைகளுக்காக வழங்கமாட்டோம் என்றார்.