அமெரிக்காவுடன் மேற்கொள்ளவுள்ள மிலேனியம் சேலஞ்ச் கோர்ப்பரேஷன் ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட குழுவுக்கான நோக்கம் மற்றும் விசாரணைக்கான காலப் பகுதி என்பன தற்போது வரை எமக்கு உரிய வகையில் தெரிவிக்கப்படவில்லை என எம்.சி.சி. தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் கலாநிதி லலித் குணருவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை – அமெரிக்க நாடுகளுக்கு இடையில் செய்துகொள்ளவிருந்த மிலேனியம் சலஞ்சஸ் அபிவிருத்தி உடன்படிக்கையை மீளாய்வு செய்யும் நோக்கத்தில் அதனை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
ஏற்கனவே இந்த உடன்படிக்கையில் அடையாளம் காணப்பட்ட பல துறைகளின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக மிலேனியம் சலஞ்சஸ் திட்ட அலுவலகத்தினால் வழங்கப்படும் முக்கிய நிதியை பெற்றுக்கொள்வதற்கு அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் அடங்கிய உடன்படிக்கை மற்றும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக 2019.10.29 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களை கவனத்தில் கொண்டு மிலேனியம் சலஞ்சஸ் திட்டம் தொடர்பில் முழுமையாக மீளாய்வு செய்து அரசாங்கத்திற்கு மீளாய்வுகளை சமர்ப்பித்ததற்காக கீழ் கண்ட அங்கத்தவர்களை கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கும் அந்த குழுவினால் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் வரையில் 2019.10.29 அன்று அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட வகையில் நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வினால் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய இந்த உடன்படிக்கையை ஆராயும் வகையில் பேராசிரியர் லலித்த ஸ்ரீ குணருவன் தலைமையில் போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர் டி.எஸ். ஜெய வீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் நாலக்க ஜயவீர என்பவர்கள் உள்ளடக்கிய நால்வர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு உடன்படிக்கை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு உரிய காரணிகளை முன்வைத்த பின்னர் அடுத்த கட்டமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

