ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு சீனா வரவேற்பு

335 0

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான வணிக உடன்பாடு குறித்து மீளாய்வு செய்யப்போவதில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை  சீனா வரவேற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும் ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போது தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் நேற்று (சனிக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக்களை சீனத் தூதரகம் மிகவும் பாராட்டுகிறது. உடன்பாட்டை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்கும் இலங்கை தரப்புடன் இணைந்து செயற்பட பொருத்தமான நிறுவனங்களுக்கு வழிகாட்ட தயாராக உள்ளது.

இலங்கையின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் சீனா மிகவும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பும் கட்டுப்பாடும் முற்றிலும் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கடற்படையின் கைகளில்தான் உள்ளது. இது இலங்கையின் ஏனைய பிற துறைமுகங்களிலிருந்து வேறுபடவில்லை” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.