புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக எட்டு பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், புத்தளம், நவகத்தேகம, கருவலகஸ்வெவ, வண்ணாத்திவில்லு, கற்பிட்டி, ஆனமடு, முந்தல் மற்றும் பள்ளம ஆகிய எட்டு பிரதேச பிரிவுகளில் 1,777 குடும்பங்களைச் சேர்ந்த 6,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 1,184 குடும்பங்களைச் சேர்ந்த 4268 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 தற்காலிக முகாம்களில் 310 குடும்பங்களைச் சேர்ந்த 1183 பேரும் , நவகத்தேகம பிரதேசத்தில் அமைக்கப்படடுள்ள 2 தற்காலிக முகாம்களில் 240 குடும்பங்களைச் சேர்ந்த 730 பேரும், புத்தளம் பிரதேசத்தில் 6 தற்காலிக முகாம்களில் 551 குடும்பங்களைச் சேர்ந்த 2080 பேரும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, ஆனமடு பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 25 குடுபங்களைச் சேர்ந்த 72 பேரும் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேசத்தில் ஒரு தற்காலிக முகாமில் 40 குடும்பங்களைச்சேர்ந்த 150 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தற்காலிகமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சமைத்த உணவு , குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் என்பனவும் அந்தந்த பிரதேச செயலர் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் தப்போவ நீர்த் தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 21 அடியாக உயர்ந்துள்ளதாகவும் இதனால் நேற்று சனிக்கிழமை (21) இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 4 அடி உயரத்திற்கும் 2 வான் கதவுகள் 6.5 அடி உயரத்திற்கும் 2 கதவுகள் 10 அடி உயரத்திற்கும் திறக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலைய பொறியியலாளர் எச்.எல்.சீ புஷ்பகுமார தெரிவித்தார்.
இதனால் குறித்த பகுதியை அண்மித்து வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுள்ளார்.

