ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது எமது தரப்பின் சார்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சம்பிக்க ரணவக்கவின் விடுதலைக்காக சட்டரீதியாக மேற்கொள்ளத்தக்க அனைத்துக் காரியங்களையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவில் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து சம்பவமொன்று தொடர்பில் இந்நிலையில் சஜித் பிரேமதாஸ நேற்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலைக்குச்சென்று சம்பிக்க ரணவக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். சந்திப்பின் பின்னர் சிறைச்சாலைக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்றைய தினம் (நேற்று) சம்பிக்க ரணவக்கவை சந்திப்பதற்கான நானும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இங்கு வருகைதந்திருக்கிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது எமது தரப்பின் சார்பில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சம்பிக்க ரணவக்கவின் விடுதலைக்காக சட்டரீதியாக மேற்கொள்ளத்தக்க அனைத்துக் காரியங்களையும் செய்வோம். சம்பிக்க ரணவக்கவின் உடல்நிலையைப் பொறுத்தவரை வைத்திய பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் அவருக்கு அத்தியாவசியமாக வழங்கப்பட வேண்டிய வசதிகள் அனைத்தும் பெற்றுக்கொடுக்கப்படும் என்று நம்புகின்றேன்.
இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதனால், இதுகுறித்து சட்டத்திற்கு உட்பட்ட விதமாக எமக்குச் சாத்தியமான அனைத்தையும் சம்பிக்க ரணவக்கவின் சார்பில் செய்வோம் என்பதை மாத்திரமே என்னால் கூறமுடியும். அதேவேளை அவருடைய கைது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறியே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயமாகும் என்றார்.
மேலும் செய்தியாளர்கள் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித்தலைவர் என்று அழைத்தபோது, தான் எதிர்க்கட்சித்தலைவர் என்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உறுதியான பின்னர் அவ்வாறு அழைக்குமாறு கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்
இதேவேளை சஜித் பிரேமதாஸ நேற்று (21) சனிக்கிழமை 1 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
நீர்கொழம்பு சிறைச்சாலையில் பல மாதகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்;சியின் நீர்கொழும்பு முன்னாள் அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ரொயிஸ் விஜித்த பெர்னாந்து , ஐக்கிய தேசியக் கட்;சியின் சிலாபம் அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாந்த அபேசேகர ஆகியோரை சந்தித்து சுகநலம் விசாரிப்பதற்காகவே சஜித் பிரேமதாச சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ஹெக்கடர் அப்புஹாமி, அசோக் அபேசிங்க ஆகியோரும் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.

