அரசு அருங்காட்சியத்தை ‘பார்’ ஆக்கிய காவலாளி

410 0

பழனி அரசு அருங்காட்சியகத்தில் நண்பர்களுடன் காவலாளி மது விருந்து கொண்டாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.பழனி அடிவாரம் சன்னதி வீதியில் தண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான அரசு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு காவலாளியாக அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாயவன் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று தனது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டோருடன் அருங்காட்சியக வளாகத்தில் மது விருந்து கொண்டாடியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாயவன் மற்றும் அவரது நண்பர்கள் போதையில் இருந்துள்ளனர்.

அதை விசாரித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அருங்காட்சியகத்தில் பழனி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த சுவாமி சிலைகள் உள்ளன. இதனை பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கும் காவலாளி போதையில் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவம் குறித்து பழனி அரசு அருங்காட்சியக அதிகாரி குணசேகரிடம் கேட்ட போது மாயவனிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.