டெல்லியில் வன்முறை நீடிப்பு- பஸ், வாகனங்களுக்கு தீவைப்பு

269 0

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் வன்முறை சம்பவங்கள் நீடித்து வருகின்றன. மேலும் வாகனங்களுக்கு தீவைக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது.

இதையடுத்து அந்த சட்ட திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து கடந்த வாரம் வியாழக்கிழமை முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் இருந்து மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு வந்துள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த சட்ட திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாக கூறி நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக கடந்த 10 நாட்களாக நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் உருவான இந்த போராட்டம் பிறகு மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், டெல்லி என்று வட மாவட்டங்களிலும் பரவியது. கேரளாவில் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து முழு அடைப்பு நடத்தப்பட்டது.

தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில் பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து சாலைகளை மறித்து போராட்டம் நடத்தினார்கள். சுமார் 4 மணி நேரம் அவர்களது போராட்டம் நீடித்தது.

இதையடுத்து டெல்லியில் ஜமாமஸ்ஜீத், லால், குணான், ஜகீர் நகர், சீலாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் கடைகளை மூடி போராட்டத்தில் குதித்தனர். 2 பஸ்கள், 3 பைக்குகளுக்கு தீ வைத்தனர். 2 போலீஸ் பூத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

கலவரக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 12 போலீஸ்காரர்கள் உள்பட 34 பேர் காயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க போலீசார் 2 தடவை வானத்தை நோக்கி சுட்டனர். அதன் பிறகே கூட்டம் கலைந்தது. வன்முறை தொடர்பாக போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

சீலாம்பூரில் நடந்த போராட்டம் முதலில் அமைதியாக சென்று கொண்டு இருந்தது. இறுதியில் சிலர் கல்வீசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டது. டெல்லியில் நேற்று 4 இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சீலாம்பூர் பகுதியில் மட்டுமே வன்முறை சம்பவங்கள் நடந்தன. ஜாமியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் உள்பட மற்ற இடங்களில் நடந்த இந்த போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தன.

இதற்கிடையே ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட மாணவர் கிடையாது. மாணவர்களை கலவரம் செய்ய தூண்டி விட்டவர்கள் என்று தெரிய வந்தது.

இஸ்லாமிய மாணவர்களை போராட்டம் நடத்த தூண்டியதாக மேலும் 15 பேரை டெல்லி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. போராட்டத்தை தூண்டியதாக முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசீப் கான் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது.

இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வந்த போராட்டங்கள் குறைய ஆரம்பித்து விட்டன. நேற்று அசாமில் தலைமை செயலகத்தை தீ வைத்து எரிக்க ஒரு கும்பல் முயன்றது. அதை போலீசார் முறியடித்தனர். அசாமில் நேற்று 10 மாவட்டங்களில் அமைதி திரும்பியதால் ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லி, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், பீகார், தமிழ்நாடு, கேரளா உள்பட சில மாநிலங்களில் இன்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் நடந்தன. என்றாலும் போராட்டங்கள் சில மணி நேரங்களில் நிறைவு பெற்றன.

தொடர்ந்து போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்துள்ளன. இதனால் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்ற வடகிழக்கு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.