ராஜிதவை விசாரியுங்கள் – ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்து

300 0

வெள்ளை வேன் விவகாரம் உட்பட பல்வேறு போலியான குற்றச்சாட்டுக்களை அரசியல் தேவைகளுக்காக 2015ஆம் ஆண்டு தொடக்கம் ராஜித சேனாரத்ன முன்வைத்து வருகின்றார். அவருக்கு எதிராக சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தை போன்று நாங்கள்  அரசியல் பழிவாங்கலை முன்னெடுக்கவில்லை என  சக்திவலு இராஜாங்க அமைச்சர்  ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று  திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியினை தொடர்ந்து இடைக்கால அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு  ஒரு மாத காலம் கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. ஆனால் பல்வேறு விடயங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன்  இளைஞர் யுவதிகளின் நன்மதிப்பினையும்  அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளமை பாரிய வெற்றியாகும். இந்த  ஆதரவு   பொதுத்தேர்தலில் பாரிய செல்வாக்கை செலுத்தும்.

இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்று தான் முன்கூட்டியே அறிந்திருந்தாக  முன்னாள் பிரதமர்  ரணில் விக்ரமசிங்க   தற்போது குறிப்பிடுகின்றமை  அந்த கட்சியின் பலவீனத்தன்மையினை வெளிப்படுத்துகின்றது.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி   ஒருபோதும் பெரும்பான்மை ஆதரவினை பெறாது.  நான்கு  பிரிவாக பிளவுப்பட்டே ஐக்கிய தேசிய கட்சி தேர்தலில் போட்டியிடும். தேர்தலில் வெற்றிக் கொண்டு   மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்  பலமான ஆட்சியினை அமைப்பதற்கான  திட்டங்கள் முறையாக வகுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை வேன் விவகாரம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகின்றது.   சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையே வெள்ளை வேன்  சாரதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்கள்  முன்னாள் சுகாதாரதுறை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தலைமையில் வெளிப்படுத்தினார்கள். இன்று  அவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பதற்கு  இரு  சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

அரசியல் தேவைகளுக்காக 2015ஆம் ஆண்டு தொடக்கம்  ராஜித சேனாரத்ன தொடர்ந்து பல போலியான குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து வந்துள்ளார்.  இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று  பாதுகாப்பு  தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அரசியல் பழிவாங்கலை கருத்திற் கொண்டு தற்போது இடைக்கால அரசாங்கம் செயற்படவில்லை. அரசியல் தேவைகளுக்காக   பிறரின் மீது  போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பது நிறுத்தப்பட  வேண்டும்.