மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வில் 1.5 லட்சம் பேர் பங்கேற்பு

293 0

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வை 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.

மத்திய அரசின் தேசிய வருவாய்வழித் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத்தின்கீழ் அரசுப்பள்ளிகளில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்காக மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 9 முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது நடப்புகல்வியாண்டு முதல் உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு கடந்த டிசம்பர் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை காரணமாக தேர்வு டிசம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. திட்டமிட்டபடி என்எம்எம்எஸ் தேர்வு நேற்று நடைபெற்றது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 534 தேர்வு மையங்களில் 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். காலை 9.30 முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும், அதன்பின் 11.30 முதல்மதியம் 1 மணி வரை படிப்பறிவுத் திறன் தேர்வும் நடைபெற்றது. இதில் மனத்திறன் தேர்வு கடினமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.