விருப்ப ஓய்வுத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் 5,308 பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 50 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான, பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே, இந்நிறுவனத்தை, எம்டிஎன்எல் நிறுவனத்துடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், இவ்விரு நிறுவனங்களையும் சீரமைக்கவும், 4ஜி சேவையை வழங்கவும், விருப்ப ஓய்வூத் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக, ரூ.68,751 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

